தமிழகத் திருமடங்களில் தொன்மையும் சிறப்பும் வாய்ந்தது திருப்பனந்தாள் திருமடமாகும். இது தென் இந்தியாவில் தென் தமிழகப் பகுதியில் தஞ்சை மாவட்டம் காவிரியாற்று வடகரையில் சென்னை – கும்பகோணம் சாலையில் அமைந்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்து தருமை ஆதீன நான்காம் குருநாதராம் ஸ்ரீமாசிலாமணி தேசிகரிடம் ஞானோபதேசம் பெற்று திருப்பனந்தாள் திருமடத்தின் குரு முதல்வராக வீற்றிருந்தவர் ஆதிகுமரகுருபரர் ஆவார். குருவின் வாக்கிற்கு இணங்கி காசி வரை சென்று தெய்வ அருளாலும் தம் தவ ஆற்றலாலும் பல சித்துகளை நிகழ்த்தி காசியில் ஸ்ரீகுமார சுவாமி மடத்தினை நிறுவினார்.அவர் வழி வந்த ஐந்துஅருளாளர்கள் ஸ்ரீ குமாரசுவாமி மடத்தின் தலைமை ஏற்று அருட்பணி செய்து வநதார்கள்.ஆறாம் அதிபராகப் பதவி ஏற்ற ஸ்ரீ தில்லைநாயக சுவாமிகள் தென்னாட்டில் உள்ள திருமடத்திற்குச் சொந்தமான சொத்துக்களைப் பரிபாலிக்க ஏதுவாகத் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் இப்போதுள்ள காசித்திருமடத்தை நிறுவினார்கள். காசியிலும் திருப்பனந்தாளிலும் மடங்கள் இருந்தாலும் இரண்டும் ஓரே நிறுவனமே. திருப்பனந்தாள் திருமடம் காலப்போக்கில் தலைமை இடமாகத் தொண்டாற்றி வரலாயிற்று. இத்திருமடத்து அதிபர்களைக் ”காசிவாசி” என்றே அழைப்பர்.

தமிழ் நூல் பதிப்புப்பணிகளைச் சிறப்பாக செய்துள்ள திருமடங்களில் திருப்பனந்தாள் திருமடம் குறிப்பிடத்தக்கதாகும். இவர்களின் திருமுறைப்பதிப்புகள் மலிவு விலையில் எல்லோராலும் வாங்கிப் பயிலும் வண்ணம் அமைந்துள்ளன. கந்தர் கலிவெண்பா, சகலகலா வல்லிமாலை போன்ற நூல்களை ஒலிப்பேழையாகவும் குறுந்தகடாகவும் மாற்றி எல்லோரும் கேட்டு மகிழவும் வழிவகை செய்துள்ளார்கள். எட்டிற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நிறுவி கல்விச் சேவைதனைப் புரிகிறார்கள்.

இருபத்து ஒன்றாம் அதிபர் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாமுனிவர் காசிவாசி முத்துக்குமார சுவாமித்தம்பிரான் சுவாமிகள் அவர்களின் நல்லாட்சியில் இத்திருமடம் நன்முறையில் இயங்கிவருகிறது. அதிபர் சுவாமியின் அனுமதியின் பெயரில் திருமடத்தில் உள்ள ஓலைச்சுவடிகளை மறுவடிவ பாதுகாப்பு செய்தற்பொருட்டு புகைப்படம் எடுக்க அனுமதியளித்ததற்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பிலும் தமிழ்மரபுக்களஞ்சியத் திட்டத்தின் சார்பிலும் நன்றிதனைத் தெரிவித்துக் கொள்கிறோம்.