திருவாவடுதுறை ஆதீனம்
திருவாவடுதுறை ஆதீனம் தென் இந்தியாவில் தென் தமிழகப் பகுதியில் உள்ளது. இவ்வாதீனம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் திருவாலங்காட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ளது. திருக்கயிலாய பரம்பரை வழியாக குருமரபில் தழைத்தோங்கி வருகிறது. திருவாவடுதுறைக்கு நவகோடி சித்தர்புரம் என்ற ஒரு பெயரும் உண்டு ஒன்பது சித்தர்கள் இவ்விடத்தில் ஒன்பது திசையில் வாழ்ந்ததால் இப்பெயர் வரலாயிற்று.
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் சிவ நெறி வளர்க்கும் செழுந்தமிழ் ஆதீனமாகும். சித்தர் சிவப்பிரகாசரிடம் ஞானோபதேசம் பெற்றவர் அருள்திரு நமசிவாய மூர்த்திகள் ஆவார். இவ்ஆதீனத்தின் குருமுதல்வர் அருள்திரு நமசிவாய மூர்த்திகள். அவர்தம் அருட்கருணையினால் கி.பி பதினான்காம் நூற்றாண்டில் இவ் ஆதீனம் தோற்றுவிக்கப்பெற்றது. இவ்வாதீன பரம்பரை ”ஆலெனத் தழைத்து அருகென வேரோடி” சிவபுண்ணியச் செயல்களைச் செய்து வருகிறது. இங்கு பசுபுண்ணியங்களாகிய முப்பத்திரண்டு வகை அறங்களும், பதிபுண்ணியங்களாகிய ஞானசாத்திரப் பயிற்சி, வழிபாடு, ஞானோபதேசம் ஆகியனவும் நிகழ்கின்றன.
இவ்வாதீனத்தின் மரபில் வந்த குரு மகா சன்னிதானங்கள் யாவரும் குருநெறிமரபின் வழி அருட் செங்கோல் ஓச்சித் தன்னடைந்தார்க்கு ஆசியருளியும், மெய்கண்ட சாத்திரங்களுக்கு விளக்க நூல்களாக தம் அடியார்களைக் கொண்டு நன்னூல்கள் பல செய்வித்தும் தமிழ்கூறு நல்லுலகிற்கு அளித்தனர். இத்தகு அருள் ஞானப் பரம்பரையில் இருபத்துஇரண்டு குரு மகா சன்னிதானங்கள் சிறப்புற அருளாட்சி புரிந்து வந்தனர். அவ்வழியே இருபத்துமூன்றாம் குரு மகா சன்னிதானமாக எழுந்தருளி ஞானச் செங்கோல் செலுத்தி அருளாட்சி புரியும் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் எல்லோர்க்கும் எளி வந்த குருநாதராக எழுந்தருளி அருளுகின்றார்கள்.
இருபத்துமூன்றாம் குரு மகா சந்நிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் நல்லாட்சியில் சாதி மத வேறுபாடில்லாமல் யாவரும் எளிமையாய் சைவத்தைப் புரிந்துணர சைவசித்தாந்தம் பரப்புதல், பல்வேறு நாடுகளுக்குச் சென்று சமய நெறிகளைப் பரப்புதல், எட்டுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நிறுவி ஏழை மாணவர்களுக்குத் தினந்தோறும் காலை மதியம் என்னும் இரு வேளையிலும் உணவு கொடுத்து கல்விதனைப் புகட்டல், சிறந்த மாணவ மணிகளுக்கு அருட்கொடை, பரிசளிப்பு முதலியவற்றால் ஊக்கப்படுத்தல். தமிழறிஞர்கள், பண்ணிசை வாணர்கள், ஆகமப் பண்டிதர்கள், சிவாசாரியர்கள், சைவசித்தாந்த அறிஞர்கள், கல்வியாளர்கள், தொல்லியல் அறிஞர்கள், சிறப்புறச் செயல் புரியும் அரசு சார் அலுவலர்கள், கலை வல்லுநர்கள் என நற்றிறம் படைத்த சான்றோர்களுக்கு விருது, பொற்கிழி முதலியன கொடுத்து அவர்களின் தொண்டினைப் பாராட்டல், திருக்கோயில்கள், கிளைமடங்களைப் புரந்தருளல் ஆகிய அருட்செயல்களில் தம்மை ஈடுபடுத்தி ஆதீனத்தின் பெருமையினைச் சீர்வளர்சீர் குரு மகா சந்நிதானம் அவர்கள் மேம்படுத்தி வருகிறார்கள்.
திருவாவடுதுறை ஆதீன சரஸ்வதி மகால் நூலகம் பழமையான ஓலைச்சுவடிகள், பழைய அச்சுப் பதிப்புக்களைப் பாதுகாத்து வருகிறது. முந்நூற்றுக்கும் அதிகமான தமிழ்நூல்களை வெளியிட்டும் மறுபதிப்புச் செய்தும், திருத்தப்பதிப்புச் செய்தும் வெளியிட்டுள்ளது இவ் ஆதீனம். பல்வேறு கிளைமடங்களிலும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாதீனத்திற்குச் சிறப்பு செய்த தமிழறிஞர்களான மாதவச் சிவஞான முனிவர், கச்சியப்ப முனிவர், வீழி சிவாக்கிர யோகிகள், திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர், யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர், த.ச.மீனாட்சிசுந்தரம் பிள்ளை, புலவர் ச.தண்டபாணி தேசிகர் போன்றோர் ஆவர்.
சைவமும் தமிழும் இரு கண்களெனக்கொண்டு சமய உலகிலும், தமிழ் உலகிலும் திருவாவடுதுறை ஆதீனம் ஆற்றிவரும் செயல்கள் அரும்பெருமைவாய்ந்தவையாம். இருபத்துமூன்றாம் பட்டம் சீர்வளர்சீர் குருமகாசந்நிதானம் அவர்களின் சீரிய முயற்சியால் திருவாவடுதுறை ஆதீன சரஸ்வதிமகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளை மறுவடிவ பாதுகாப்பு செய்யவும் புகைப்படம் எடுக்கவும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு இசைவளித்து ஓலைச்சுவடிகளுக்கு ஓர் ஒப்பற்ற தொடர் வாழ்வினைத் தந்து தமிழுக்குத் தொண்டு புரிந்துள்ளார்கள். சீர்வளர்சீர் குரு மகா சன்னிதானம் அவர்களுக்குப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சார்பிலும் தமிழ் மரபுக் களஞ்சியத் திட்டத்தின் சார்பிலும் நன்றிதனைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.