ஸ்ரீவிசாகாச்சார்யார் தப நிலையம்
ஸ்ரீவிசாகாச்சார்யார் தப நிலையம் வந்தவாசி வட்டம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையிலுள்ள பொன்னூர் மலைக்கு அண்மையில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீ அஜித நாதர் ஜினாலயம், ஸ்ரீ மகாவீரர் உறைவிடப்பள்ளி, கோசாலை (மாடுகள் காப்பகம்), நூல்நிலையம், தியான மண்டபம் ஆகியன அமைந்துள்ளன. இவை அனைத்தும் அறஆர்வலர்கள் தரும் நன்கொடைகள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. மேலும் நூல்கள் வெளியீடு, அஞ்சல்வழி சமணக்கல்வி மற்றும் ஆதிபகவன் அருளறம் தாங்கிவரும் திங்கள் இதழ் ‘சுருதகேவலி’ ஆகியனவும் நடத்தப்படுகின்றன.
வட இந்தியாவிலிருந்து 1994-ல் பொன்னூர் மலையில் அமைந்துள்ள ஸ்ரீ குந்த குந்தரின் பாத தரிசனத்திற்காக திகம்பரத்துறவி பூஜ்ய குரு ஸ்ரீஆர்ஜவசாகர மாமுனிவர் வருகை தந்தார். இங்கு சில மாதங்கள் தங்கிய போது தமிழகத்தில் பகவான் மகாவீரரின் அகிம்சை முதலான உன்னதமான வாழ்வு நெறி அறங்களைப் பரப்பும் நோக்கோடு இந்த தப நிலையத்தை ஆசிர்வதித்துத் தொடங்கி வைத்தார். இது1995-ல் தொடங்கப்பட்டது. இங்கு இரண்டாம் தீர்த்தங்கரர் ஸ்ரீ அஜிதநாதரின் ஆலயம் அமைந்துள்ளது. ஆன்மநல வழிபாடு நடைபெறுகிறது. திங்கள் தோறும் தத்துவப் பயிற்சி வகுப்புகள் இரு தினங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விடத்தில் ஸ்ரீ மகாவீரர் ஊண் உறைவிடப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு பயிலும் இளம் சிறார்களுக்கு நூல் கல்வியோடு அறவொழுக்க நெறிமுறைகளும் போதிக்கப்படுகின்றன. மாடுகள் பாதுகாப்பகம் நிறுவி நன்முறையில் பராமரிக்கப்படும் நற் தொண்டினைச் செய்து வருகிறார்கள். ஆய்வாளர்களுக்குப்பயன்படும் வகையில் அரிய தமிழ் நூல்களும் இந்தி நூல்களும் ஏறத்தாழ 2000 நூல் நிலையத்தில் உள்ளன. ஓலைச்சுவடிகள் மிகச்சிறப்பான முறையில் பாதுகாத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தப நிலையத்திற்கு அறப்பணி செய்துவரும் ஸ்ரீ சுருத கேவலி பத்திரபாகு சுவாமி சேவாதளத்தின் மூலம் இதுவரை 41 அறம் சார்ந்த நூல்கள் வெளியாகியுள்ளன. ஆன்மிகம், தத்துவம், பல அரிய பிராகிருத மொழி நூல்களின் தமிழ் உரைகள் போன்றன குறிப்பிடத்தக்கன. சுருதகேவலி என்ற ஆதிபகவனின் அருளறம் தாங்கி வரும் தமிழ் மாத இதழ் 14-ஆண்டுகளாக வெளிவருகிறது. இது சமய வேறுபாடின்றி பொதுமை அறங்களை விளக்குவதாய் அமைந்துள்ளது. சமண அறங்களையும் தத்துவங்களையும் எளிய தமிழில் மூன்றாண்டு பாடத்திட்டங்களாக வகுத்து அஞ்சல் வழி மூலம் நடத்தப்பட்டு சான்றுகள் வழங்கப்படுகின்றன.