பாவேந்தரின் வாழ்க்கை வரலாறு


இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞராய், பாரதிக்குப்பின் வாழ்ந்த கவிஞர்களுள் தகுதியும், சிறப்பும் மிக்கவராய்த் திகழ்ந்தவர் பாவேந்தர் பாரதிதாசன்.  பொருளுக்காக ஆட்களைப் பாடுவோரும், பொழுது போக்கிற்காக இயற்கையைப் பாடுவோரும், போலிப் புகழுக்காக எதையும் பாடுவோரும் மலிந்திருந்த கவிதை உலகில், கொள்கையைப் பாடுவோராகவும், மக்கள் நலவாழ்வைப் பாடுவோராகவும் சமுதாய மலர்ச்சியைப் பாடுவோராகவும் விளங்கியவர் பாவேந்தர்.  பாவேந்தரின் படைப்புகள் உலக இலக்கிய வரிசையில் இடம் பெறத்தக்க பெருமை உடையவை.  இயற்கையைப் பாடி இறவாப் புகழ்பெற்ற கீட்சு, செல்லி போன்ற ஆங்கிலக் கவிஞர்கட்கு இணையானவர் என்பதைக் காட்டிலும், இயற்கையின் அழகுக் கூறுகளைப் பாடும்போதும் மக்கள் நலனையே மனதில் கொண்டு பாடும் பாங்கால் அவர்களினும் பாவேந்தர் உயர்ந்து காணப்படுகின்றார்.  பாவேந்தர் தமிழ் இலக்கியத் துறையிலும், சமுதாயத் துறையிலும் அழிக்க முடியாத அடையாளங்களை விட்டுச் சென்ற ஒரு மாபெரும் மக்கள் கவிஞர்.  இந்திய நாடு ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடிமைப்பட்டிருந்த போது, இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு, இந்திய விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு பல பாடல்களைப் பாடியவர் பாவேந்தர். 

பாவேந்தரின் வாழ்க்கைக் குறிப்பு

            பாவேந்தர் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி புதன்கிழமை இரவு 10.15 மணி அளவில் புதுச்சேரியில் கனகசபை முதலியார், இலக்குமி அம்மையார் ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார்.  பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் கனக சுப்புரத்தினம் என்பதாகும்.  விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கேற்ப சுப்புரத்தினம் இளமையிலேயே கவி இயற்றும் திறம்பெற்றுத் திகழ்ந்தார்.

1899  -   பாவேந்தர், ஆசிரியர் திருப்புளிசாமி ஐயாவிடம் தொடக்கக் கல்வி பயின்றார்.

1907  -   புதுவை மகாவித்வான் ஆ. பெரியசாமிப் பிள்ளை அவர்களிடமும், பங்காரு பத்தர் அவர்களிடமும் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.  புதுவை மாநிலக் கல்வே கல்லூரியில் உயர்நிலைக் கல்வி பயின்று பின்னர்த் தமிழ்ப் புலவர் வகுப்பில் சேர்ந்து கல்வி கற்றுப் புலவராகத் தேர்ச்சி பெற்றார்.

1908  -   பாவேந்தர் சுப்பிரமணிய பாரதியாரைக் காணும் வாய்ப்பினைப் பெற்றார்.  பாரதியாரின் புலமையும், எளிமையும் கவிஞரைக் கவர்ந்தன.  பாரதி மீது பற்று மிகக் கொண்டு தன் பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.

1909  -   இவர் தன் பதினெட்டாம் வயதில் காரைக்காலைச் சேர்ந்த நிரவி எனும் ஊரில் உள்ள பள்ளியில் அரசு ஆசிரியராகப் பணி ஏற்றார்.  பாவேந்தர் தன் கற்பனைத் திறத்தாலே தமிழ் உலகை வலம்வரத் தொடங்கினார்.  அவர் புதுவை கே.எஸ்.ஆர்., கண்டெழுதுவோன் கிறுக்கன், கிண்டல்காரன், கே.எஸ். பாரதிதாசன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள் எழுதி வந்தார்.

1920  -   பழனி அம்மாளை இல்லறத் துணைவியாக ஏற்றார்.  இவர்கள் சரசுவதி, கோபதி, வசந்தா, ரமணி எனும் மக்களைப் பெற்றெடுத்தார்கள்.  கோபதி தான் இன்று மன்னர் மன்னனாக உலா வருகின்ற பெருங்கவிஞர்.

தேசிய இயக்கத்தில் சேர்ந்து கொண்ட பாவேந்தர் கைத்தறித் துணிகளைத் தெருத்தெருவாக விற்பனை செய்தார்.  தேச சேவகன், புதுவைக் கலைமகன், தேசோபகாரி, தேசபக்தன், ஆனந்த போதினி, சுதேசமித்திரன், புதுவைமுரசு, துய்ப்ளேக்ஸ், முல்லை, குயில் ஆகிய இதழ்களுக்குப் பாவேந்தர் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

1929  -   பெரியார் ஈ.வெ.ராவின் சுயமரியாதைக் கருத்துகள் பாவேந்தரைக் கவர்ந்தன.  அதன் மூலம் பெரியாருடன் தொடர்பு கொண்டார்.  சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற பாவலர் என்று பெரியார் இவரைப் பாராட்டினார்.  இவர் அப்போது அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன், அன்பழகன் போன்ற திராவிட இயக்கத்தினரிடம் நட்புக் கொண்டிருந்தார்.  திராவிட மேடைகள் தோறும் கவிஞரின் கவிதை வரிகள் பாடப்பட்டன.  அப்போதுதான் புலவர் மத்தியிலே உலாவந்து கொண்டிருந்த கவிஞர், மக்கள் மத்தியில் உலாவரத் தொடங்கினார்.  மக்கள் கவிஞராக விளங்கினார்.

செட்டிநாட்டுத் தமிழறிஞர்களிடம் கவிஞர் தொடர்பு கொண்டிருந்தார்.  அவர்களின் நிதி உதவியுடன் சென்னை சாந்தோம் சாலையில் 'முத்தமிழ் மன்றம்' நிறுவினார்.  கவிஞர் சுரதா அந்தக் குழுவில் சேர்ந்திருந்தார். அவர் பாரதிதாசன் மீது பற்றுக் கொண்டதனால் இராசகோபால் எனும் தன் இயற்பெயரை சுரதா (சுப்புரத்தினதாசன்) என்று மாற்றிக் கொண்டார்.

1946  -   அறிஞர்களின் வாழ்த்து, பாராட்டுக் கவிதைகள், கட்டுரைகள் கொண்ட 'புரட்சிக் கவிஞர்' என்னும் தொகுப்பு நூலை முல்லை முத்தையா வெளியிட்டார்.  அதிலிருந்து இவர் புரட்சிக் கவிஞர் எனப்பட்டார்.                பாவேந்தரின் கவிதைகள் குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம், காதலா? கடமையா? தமிழச்சியின் கத்தி, இளைஞர் இலக்கியம், இசையமுது முதலிய அரிய நூல்கள் கவிஞரின் படைப்பாகும்.

1946  -   ஜீன் மாதம் 29-இல் பாவேந்தரின் 55 வயது பிறந்தநாள் விழா நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்றது.  அவ்விழாவில் பேரறிஞர் அண்ணாவின் முயற்சியால் ரூ.25000 – பணமுடிப்பு வழங்கப்பட்டது.  இதே ஆண்டில் நவம்பர் மாதம் அரசு ஆசிரியப் பணியிலிருந்து பாவேந்தர் ஓய்வு பெற்றார்.

1950  -   பொன்னுச்சாமிப் பிள்ளை முயற்சியால் பாவேந்தருக்கு மணிவிழா நடைபெற்றது.  அவ்விழாவில் கவிஞருக்குப் பொன்னாடை போர்த்தி ரூ.1000 நிதியும் அளிக்கப்பட்டது.

1954  -   புதுவை சட்டமன்றத் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சட்டமன்றத்திற்குத் தலைமை வகித்தார்.

1962  -   தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் மூதறிஞர் இராஜாஜி அவர்கள் கவிஞருக்குப் பொன்னாடை போர்த்திக் கேடயம் வழங்கிப் பாராட்டினார்.  பாண்டியன் பரிசு நூலை திரைப்படமாக்க முயன்றார் கவிஞர்.  அது நடைபெறவில்லை.  பின்னர் பாரதியார் வாழ்க்கை வரலாற்றினைத் திரைப்படமாக்க எண்ணினார்.  அப்படத்தில் தாமே பாரதியாராகவும் நடிக்க இருந்தார்.  அதுவும் நடைபெறவில்லை.  திரைப்படங்களை உருவாக்க ஓயாது உழைத்த கவிஞரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

1964  -   ஏப்ரல் மாதத்தில் திடீரென உடல் நலிவுற்றார் பாவேந்தர்.  அதன் பின்னர் சென்னைப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தமிழன்னை பெற்றெடுத்த தவப்புதல்வர், அழகின் சிரிப்பு, பாடிவந்த நிலா.  1964-ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் நாள் சென்னையில் இயற்கை எய்தினார்.  22.4.1964ல் அவரது உடல் புதுவை மண்ணில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

1965 -    புதுவையில் கவிஞரின் நினைவு மண்டபம் புதுவை நகரசபையால் கட்டப்பட்டது.

1968 - சனவரியில் சென்னையில் நடைபெற்ற 2-வது உலகத் தமிழ் மாநாட்டின் போது சென்னைக் கடற்கரையில் கவிஞருக்குச் சிலை எழுப்பப்பட்டது.

1972 - ஏப்ரல் 29-ல் புதுவை பூங்காவில் புதுவை அரசின் சார்பில் கவிஞருக்கு முழு உருவச்சிலை நிறுவப்பட்டது. பாரதிதாசன் புதுவையில் வாழ்ந்த வீட்டைப் புதுவை அரசு விலைக்கு வாங்கியது. அங்கு கவிஞரின் நினைவு நூலகம் செயல்பட்டு வருகின்றது. பாவேந்தர் பயன்படுத்திய பொருட்கள் மக்களின் பார்வைக்கு ஆங்கே வைக்கப்பட்டது.

1982 - திருச்சியில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகத்திற்குப் பாவேந்தரின் நினைவாகப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் எனத் தமிழக அரசு பெயர் சூட்டிப் பெருமை சேர்த்தது.

1990 - தமிழக அரசு கவிஞரின் நூல்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கியது. 1.11.91 முதல் இவை மக்களின் உடைமையாகும் என்றும் அரசு அறிவித்தது. ஆண்டுதோறும், ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று தமிழக அரசு சார்பிலும், புதுவை அரசு சார்பிலும் பாவேந்தரின் பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பாவேந்தரின் புனைப் பெயர்கள்

1. பாரதிதாசன்
2. கே.எஸ். பாரதிதாசன்
3. புதுவை கே.எஸ்.ஆர்
4. கே.எஸ்.ஆர்.
5. நாடோடி
6. வழிப்போக்கன்
7. அடுத்த வீட்டுக்காரன்
8. கே.எஸ்.
9. சுயமரியாதைக்காரன்
10. வெறுப்பன்
11. கிறுக்கன்
12. கிண்டற்காரன்
13. அரசு
14. கைகாட்டி
15. கண்டெழுதுவோன்
16. செய்தி அறிவிப்பாளர்
17. உண்மை உரைப்போன்
18. கே.ஆர்
19. குயில் செய்தியாளர்.


திரைப்படத் துறையில் பாவேந்தர் பணியாற்றிய திரைப்படங்கள்

வ.எண் திரைப்படம் கதாநாயகன் வெளிவந்துள்ள ஆண்டு
1 பாலாமணி (எ) பக்காத்திருடன் டி.கே. சண்முகம் 1937
2 இராமானுஜர் சங்கு சுப்ரமணியம் 1938
3 கவிகாளமேகம் டி.என். ராஜரத்தினம் 1940
4 சுலோசனா டி.ஆர். சுந்தரம் 1944
5 ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி பி.எஸ். கோவிந்தன் 1947
6 பொன்முடி பி.வி. நரசிம்மபாரதி 1949
7 வளையாபதி ஜி. முத்துக்கிருட்டிணன் 1952
8 பாண்டியன்பரிசு சிவாஜிகணேசன் வெளிவரவில்லை
9 மகாகவி பாரதியார்          -- வெளிவரவில்லை


பாவேந்தர் உரிமையாளராகவும் ஆசிரியராகவும் பொறுப்பேற்று நடத்திய இதழ்கள்

1. புதுவைமுரசு (வார இதழ்) 1930 முதல் 1931
2. ஸ்ரீ சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம் (மாதாந்தக் கவிதைப் பத்திரிக்கை 1935
3. குயில் (புத்தகம்) 1946
4. குயில் (ஒரு பெயர்ப்பன்னூல்) 1947
5. குயில் (திங்கள் இதழ்) 1948
6. குயில் (தினசரி) 1948
7. குயில் (கிழமை இதழ்) 1958 முதல் 1961
8. குயில் (திங்களிருமுறை) 1962

பாவேந்தர் ஆசிரியராகப் பணியாற்றிய இடங்கள்

வ.எண் ஊர் ஆண்டு
1 நிரவி (காரைக்கால்) 1907
2 முத்திரைப் பாளையம் (புதுச்சேரி) 1912
3 கூனிச்சம்பட்டு (புதுச்சேரி) 1914
4 வில்லியனூர் (புதுச்சேரி) 1916
5 ஆலங்குப்பம் (புதுச்சேரி) 1916
6 திருநள்ளாறு (காரைக்கால்) 1917
7 திருபுவனை (புதுச்சேரி) 1918
8 திருமலைராயன்பட்டினம் (காரைக்கால்) 1921
9 முத்தியால் பேட்டை (புதுச்சேரி) 1924
10 புதுவை மிசியோன் வீதி ஆண்கள் பள்ளி (புதுச்சேரி) 1926
11 புதுவை சுயர்கூப் வீதி பள்ளி (புதுச்சேரி) 1931
12 கூனிச்சம்பட்டு (புதுச்சேரி) 1934
13 நெட்டப்பாக்கம் (புதுச்சேரி0 1935
14 புதுவை சுய்ர்கூப் வீதி பள்ளி (புதுச்சேரி) 1939
15 நிரவி (காரைக்கால்) 20.7.1944
16 புதுவை மிசியோன் வீதி ஆண்கள் பள்ளி (புதுச்சேரி) 26.7.1944


பாவேந்தரின் மறைவுக்குப் பின்

1965 - ஏப்ரல் 21இல் புதுச்சேரி மாநகராட்சியினரால் கடற்கரை சார்ந்த பாப்பம்மாள் கோவில் இடுகாட்டில் பாவேந்தருக்கு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டது.

1966 - சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது மெரினா கடற்கரையில் பாவேந்தரின் திருவுருவச்சிலை முனைவர் மு. வரதராசனாரால் திறந்து வைக்கப்பட்டது.

1968 - புதுச்சேரியில் பாரதிதாசன் மகளிர் கல்லூரியை மாண்புமிகு முதலமைச்சர் திரு. வி. வேங்கடசுப்பு அவர்கள் தலைமையில் மேதகு துணைநிலை ஆளநர் சீலம் அவர்கள் திறந்து வைத்தார்.

1970 - 1969-ஆம் ஆண்டிற்கான புதடெல்லியின் சாகித்திய அகாதெமி விருது பாவேந்தரின் 'பிசிராந்தையார்' எனும் நாடக நூலுக்கு வழங்கப்பட்டது.

1971 - புதுச்சேரி அரசால் பாவேந்தரின் பிறந்த நாள் விழாக் கொண்டாடப்பட்டது. எண்.95, பெருமாள் கோவில் தெரு, புதுச்சேரி-1ல் உள்ள பாவேந்தரின் இல்லம் அரசுடமையாக்கப்பட்டது. அவ்வில்லத்தில் நினைவு நூலகம், காட்சிக் கூடத்தினை மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஏம்.ஓ.எச். பாரூக் அவர்கள் தலைமையில் மேதகு புதுச்சேரி துணைநிலை ஆளநர் பி.டி. ஜத்தி அவர்கள் ஏப்ரல் 29-இல் திறந்து வைத்தார். டிசம்பர் 28-ல் பாவேந்தரின் தமிழ் வாழ்த்துப் பாடல் அரசு விழாக்களிலும், பள்ளிகளிலும் இறைவாழ்த்துப் பாடலாகப் பாடவேண்டும் என அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

1972 - ஏப்ரல் 29-ல் பாவேந்தரின் முழு உருவச்சிலை டாக்டர் ராஜா சர் முத்தையர் அவர்கள் தலைமையில் மேதகு புதுச்சேரி துணைநிலை ஆளநர் சேத்திலால் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

1978 - தமிழக அரசால் பாவேந்தரின் பிறந்தநாள் விழாவை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடுவதென்றும் பாரதிதாசன் விருது ஆண்டுதோறும் ஏப்ரல் 29,30 ஆகிய நாள்களில் வழங்குவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.

1979 - பாவேந்தரின் கடல்மேற் குமிழிகள் எனும் நூல் எல். கதலீஸ் என்பவரால் பிரஞ்சு மொழியில் 'டு' நுஉரஅந னந டய அநச' எனும் பெயரில் நூலாக வெளியிடப்பட்டது.

1982 - ஏப்ரல் 29-ல் மேதகு தமிழக ஆளநர் சாதிக் அலி தலைமையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைத் திறந்து வைத்தார். பாவேந்தரின் மருமகளும் தமிழ் மாமணி மன்னர் மன்னனின் மனைவியுமான திருமதி சாவித்திரி இயற்கை எய்தினார்.

1986 - 'கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல்' எனும் தலைப்பில் தமிழ் மாமணி மன்னர் மன்னன் அவர்களால் வெளியிடப்பட்ட பாவேந்தரின் வாழ்க்கை வரலாற்று நூலிற்குத் தமிழக அரசின் பரிசு வழங்கப்பட்டது.

1989 - மே 21ல் பாவேந்தரின் மனைவி பழனியம்மாள் இயற்கை எய்தினார்.

1990 - புதுச்சேரி அரசால் பாவேந்தரின் நூற்றாண்டு விழர் ஆகஸ்ட் 26, 27 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டது. மாண்புமிகு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு பாவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்கியது. பாவேந்தரின் நூற்றாண்டுத் தொடக்கவிழாக் கொண்டாடப்பட்டது. 1991 - மலேசியாவில் பாவேந்தரின் நூற்றாண்டு விழா செப்டம்பரில் கொண்டாடப்பட்டது. பாவேந்தரின் 'கல்கண்டு' நாடகத்தை திருமதி டி. டேவிட் அவர்கள் பிரெஞ்சு மொழியில் 'உயனெi' எனும் பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார்.

1992 - பாரிசில் பாவேந்தரின் நூற்றாண்டு விழா மே மாதத்தில் கொண்டாடப்பட்டது.

1993 - பாவேந்தரின் 'பிசிராந்தையார்' நாடகம் திரு. எல். கதலீஸ் என்பவரால் பிரெஞ்சு மொழியில் நூலாக வெளியிடப்பட்டது.

1994 - தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது பல்கலைக்கழகங்களில் தமிழக அரசு பாரதிதாசன் பெயரில் அறக்கட்டளையை நிறுவியுள்ளது.

1997 - புதுமை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தால் 10.5.1997 இல் பாரதிதாசன் கவிதைகள் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளியிடப்பட்டது.

2001 - மத்திய அரசு பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் திருவுருப் படத்துடன் கூடிய அஞ்சல் தலையை 9.10.2001இல் வெளியிட்டுள்ளது.

2005 - புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத் துறையால் 11.9.2005இல் பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியாகும். ஆய்வு மையம் குறித்த ஆவணப்படம் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது.

பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் - ஆய்வு மையம்

1900-ஆம் ஆண்டில் கட்டப்பட்டதெனக் கருதப்படும் இந்த வீட்டில் புதுச்சேரியின் புகழ்மிகு கவிஞராகிய சுப்பிரத்தினம் எனும் இயற்பெயரைக் கொண்ட பாரதிதாசன், 1945இல் குடியேறி 1964 வரை வாழ்ந்து தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளார். பாவேந்தர் என்றும் புரட்சிக் கவிஞர் என்றும் அழைக்கப்பட்ட இவர் புதுச்சேரியில் சுதந்திர இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். எண்.95, பெருமாள் கோவில்தெரு, புதுச்சேரி-1 இல் உள்ள பாவேந்தரின் இந்த இல்லம் அரசுடமையாக்கப்பட்டது. இவ்வில்லத்தில் நினைவு நூலகம், காட்சிக் கூடத்தினை மாண்புமிகு முதலமைச்சர் திரு. எம்.ஓ.எச். பாரூக் அவர்களின் தலைமையில் மேதகு புதுச்சேரி துணைநிலை ஆளநர் பி.டி. ஜத்தி அவர்கள் 1971 ஏப்ரல் 29-இல் திறந்து வைத்தார். 1977 ஆம் ஆண்டு ஆறாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் பாரதிதாசன் நினைவு நூலகம், காட்சிக்கூடம் ஆகியவற்றை ஆராய்ச்சி மையமாக மாற்றியமைப்பதற்கான திட்டம் உருவாக்கப்பட்டு 1978 ஆம் ஆண்டில் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டது. 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் முதல் நாள் இந்நினைவு நூலகம் காட்சிக் கூடமானது, பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் ஆய்வு மையமாக மாற்றியமைக்கப்பட்டது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படங்கள், கையெழுத்துப் படிகள், அவர் எழுதிய நூல்கள், இதழ்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், பாவேந்தரைப் பற்றி அவர் காலத்தில் வாழ்ந்து பழகிய நண்பர்கள், கவிஞர்கள், உறவினர்களிடமிருந்து ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்ட செய்திகள், பாவேந்தரைப் பற்றிய தமிழ் அறிஞர்களின் கருத்துகள், பத்திரிகைகளின் மதிப்புரைகள் ஆகியன அருங்காட்சியகத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.

புகைப்படங்கள்

இலக்கியம், அரசியல், பத்திரிக்கை, திரைப்படத்துறை, மொழி, இனம், நாடு தொடர்பாகப் பாவேந்தரின் வரலாற்று நிகழ்வகளை வெளிப்படுத்தும் வகையில் பல அரிய நிழற்படங்கள் பாவேந்தரின் படைப்புகளின் முகப்பு அட்டைகள், அவரது கலை, இலக்கியப் பணிகள் பற்றிய அறிஞர்களின் பாராட்டுரைகள், பத்திரிகைகளின் கருத்துரைகள் வேண்டிய குறிப்புகளுடன் அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

கையெழுத்துப் படிகள்

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தம் கைப்பட எழதிய கவிதைகள், கலை, இலக்கியம், அரசியல் சார்ந்த தம் நண்பர்களுக்கு எழுதிய மடல்கள், அவர் ஆசிரியராகப் பணியாற்றிய போது அவரால் எழுதப்பட்ட பாடத் தயாரிப்புகள், சங்க இலக்கியம், திருக்குறள் உரைதொடர்பாக அவரால் எழுதப்பட்ட குறிப்புகள், தந்தை பெரியார், டாக்டர் கலைஞர் ஆகியோரால் எழுதப்பட்ட மடல்கள், வாழ்த்துச் செய்திகள் போன்ற அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதழ்கள்

பாவேந்தர் இதழாசிரியராகப் பெறுப்பேற்று நடத்திய புதுவை முரசு (1930), ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் (1935), குயில் (1947), திங்கள் இதழ், கிழமை இதழ், தினசரி ஆகியவற்றின் படிகளும், அவரது கவிதைகள் இடம் பெற்ற பொன்னி, தமிழ் முரசு, தேச சேவகன், சுகாபி விருத்தினி, குடி அரசு ஆகிய இதழ்களும், பாரதிதாசன் நூற்றாண்டு விழா மலர்களும் மற்றும் பாரதிதாசன் படித்த புத்தகங்களான கம்பராமாயண அகராதி, புறப்பொருள் வெண்பா மாலை, கோடீச்சுரக்கோவை, சமுதாயமும் பண்பாடும், பெரியபுராணம், அஷ;டபிரபந்தம், ஞான வாசிட்டவ மலராமாயண வசனம், பிங்கல நிகண்டு, சூதசங்கிதைப் புராணம் உள்ளிட்ட நூல்கள் பலவும் மக்கள் பார்வைக்கும் ஆய்வாளர்களின் பயன்பாட்டிற்கும் ஆய்வு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

நூலகம்

1926 முதல் 1964 வரை பாரதிதாசன் அவர்களால் எழுதப்பட்ட நூல்களும் அவற்றின் பல்வேறு பதிப்புகளும், அப்பதிப்புகளும், அப்பதிப்புகள் குறித்து எழுதப்பட்ட திறனாய்வு நூல்களும் இலக்கியம், மொழியியல், நாடகம், நாட்டுப்புற இலக்கியம் தொடர்பான பல்துறைப்பட்ட நூல்களும், இலக்கிய இதழ்களும் நூலகப் பகுதியில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. இந்நூலகம் ஆய்வாளர்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பார்வை நூலகமாக 1971 முதல் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது.

ஆய்வுப் பணிகள்

பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு, அவர்தம் படைப்புகள் தொடர்பாக முனைவர்பட்ட (Ph.D.) ஆய்வினை மேற்கொள்ளத் தேர்ந்தெடுக்கப்படும் புதுச்சேரியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்களுக்குப் பாரதிதாசன் அருங்காட்சியகத்தின் மூலம் ஆய்வு நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது.

பாரதிதாசன் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்குப் பயன்படும் வகையில் பாரதிதாசன் எழுதிய நூல்கள், அந்நூல்கள் தொடர்பாக வெளி வந்துள்ள திறனாய்வு நூல்கள், ஸ்ரீ சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம், புதுவை முரசு, குயில், தேசசேவகன், சுகாபிவிருத்தினி, கழகக்குரல், ஆத்மசக்தி, பொன்னி, பாரதிதாசன் நினைவு மலர், பைங்கிளி, தமிழம், எழுத்தாளன், சக்தி, திராவிடநாடு, பாரதிதாசன் நூற்றாண்டு விழா மலர் பாரதிதாசன் மணிவிழா மலர், சுரதா, உண்மை, தமிழரசு ஆகிய இதழ்கள், எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி., டி.லிட்., பட்ட ஆய்வேடுகள் பாரதிதாசன் தொடர்பான சமகாலக் கவிஞர்கள் அறிஞர்களிடமிருந்து ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்ட வரலாற்றுச் செய்திகள் உட்படப் பல அரிய தொகுப்புகள் இந்த ஆய்வு மையத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.

1947 முதல் 1962 வரை பாரதிதாசன் இதழாசிரியராகப் பொறுப்பேற்று நடத்திய குயில் இதழில வெளிவந்துள்ள கவிதைகள், கட்டுரைகள் அனைத்தும் வகைப்பாடு செய்யப்பட்டு 1996 இல் இம் மையத்தில் வாயிலாக முனைவர் அ. கனகராசு அவர்களால் 'பாரதிதாசன் குயில் அடைவு' (ஆய்வடங்கல்) எனும் பெயரில் நூலாக வெளியிடப்பட்டுள்ளன.

ஆன்மீகத்தில் பாவேந்தர்

பாரதிததாசன் தன்னுடைய வாழ்க்கையின் தொடக்க காலத்தில் ஆத்திகராகவே விளங்கினார். இதனால் 'ஸ்ரீ மயிலம் சுப்ரமணியர் துதியமுது', 'சக்திப்பாட்டு', 1933 ஆம் ஆண்டு மா. சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற நாத்திகர் மாநாட்டில் 'நான் ஒரு நிரந்தரமான நாத்திகன்' என்று பிரகடனம் செய்தார். பாரதிதாசனின் முதற் கவிதையான 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்பது அவர் இயற்கையையும் பிறவற்றையும் தெய்வமாகக் கண்டார் என்பதை உணர்த்துகிறது. இவர் தமிழர் மரபு வழிபட்ட பக்திப் பாவலனாக இருந்து 'மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது' பாடியுள்ளார். விநாயகர் காப்பு, விநாயகர் துதி, சிவபெருமான் துதி, உமை துதி, திருமால் துதி போன்ற வழிபாட்டுப் பாடல் பாடியுள்ளார். பாரதியிடம் பாரதிதாசன் கொண்ட பற்றாலும், ஈர்ப்பாலும் சக்தி வழிபர்டைச் சார்ந்திருந்தார் என்று கூறலாம்.

அரசியலில் பாவேந்தர்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அரசியலிலும், தீவிர ஈடுபாடு உடையவராகத் திகழ்ந்தார். பாரதியாருடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாகத் தொடக்கத்தில் அவர் தேசியவாதியாக விளங்கினார். தேசியப் பாடல்களை எழுதினார்.
காந்தியடிகள், நேரு, திலகர் போன்ற தலைவர்க் புதுவை வந்தபோது அவர்களை நேரில் காணும் வாய்ப்பு கவிஞருக்குக் கிடைத்தது. மேலும் பாரதியார், அரவிந்தர், வ.வே.சு. ஐயர் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களுடன் பாரதிதாசன் நெருங்கிப் பழகியவர்.
புதுவையில் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்ற போது, அந்தப் போராட்டத்திலும் கலந்து கொண்டார் பாவேந்தர். 1919 ஆம் ஆண்டு பிரெஞ்சிந்தியாவில் தேர்தல்கள் நடைபெற்றன. அப்பொழுது திருபுவனை பகுதியில் ஆசிரியராக இருந்தார் பாவேந்தர்.
திருப்புவனை தொகுதியில் ஹென்றி கெய்ப்ளே என்பவர் போட்டியிட்டார். பிரெஞ்சு அரசாங்கத்தில் அவர் செல்வாக்கு உடையவர். கெய்ப்ளேயை எதிர்த்து குட்டியா சபாபதி பிள்ளை என்பவர் நின்றார். பாரதிதாசன் சபாபதி பிள்ளையை ஆதரித்து ஓ;டுச் சேகரித்தார். அதன் பயனாக சபாபதி பிள்ளையே அதிக ஓட்டு பெற்றார். ஆனால் ஓட்டு எண்ணிக்கையின் போது, கெய்ப்ளேவுக்கு அதிக ஓட்டுகள் விழுந்ததாகப் பொய்க்கணக்கு எழுதும் முயற்சி நடைபெற்றது. பாவேந்தர் குறுக்கிட்டால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இதனால் வெறுப்புற்ற கெய்ப்ளே, கவிஞரின் மேல் பல பொய் வழக்குகளைப் போட்டு அவரைச் சிறைப்படுத்தினார். ஒரு வருட காலம் சிறையில் இருந்தார் பாவேந்தர்.

பாரதியாருடைய மறைவுக்குப் பிறகு, பெரியாரின் பகுத்தறிவு இயக்கம் பாரதிதாசனைக் கவர்ந்தது. 1928 ஆம் ஆண்டு முதல் திராவிடர் கழகத்தில் உறுப்பினராக பாவேந்தர் இருந்தார். கழகத்தின் கொள்கைகளைப் பரப்பும் 'பகுத்தறிவு இயக்கப் பாவலராக' அவர் விளங்கினார். முன்னணித் தலைவர்களுள் ஒருவராக உயர்ந்தார். 1935 ஆம் ஆண்டு புதுவையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் முன்னணி வேட்பாளராகக் காசுக்கடை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது தேர்தல் சின்னம் யானை சின்னம் ஆகும்.

அப்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் அவரே வயதில் மூத்தவராகவும் இருந்ததால் சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

சிறுகதை ஆசிரியர் பாவேந்தர்

பாடல் துறையில் மட்டுமின்றிச் சிறுகதைத் துறையிலும் சிறந்து விளங்கியவர் பாவேந்தர். தம்முடைய புரட்சிக் கருத்துக்களை மக்களிடையே பரப்புவதற்குச் சிறுகதைத் துறையும் அவருக்குத் துணை புரிந்தது.

1955 ஆம் ஆண்டில் புதுவை ஞாயிறு நூற்பதிப்பகத்தார் கவிஞரின் சிறுகதைகளைக் தொகுத்துப் 'பாரதிதாசன் கதைகள்' என்று நூலாக வெளியிட்டனர். 1931-32 ஆம் ஆண்டுகளில் 'புதுவை முரசு' வார இதழில் வெளிவந்த 13 சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகின்றது.

மூடப்பழக்க வழக்கங்களைச் சமுதாயத்திலிருந்து ஒழிக்க விரும்பி, நகைச்சுவையாக எழுதப்பட்டவையே அச்சிறுகதைகள். 1930 ஆம் ஆண்டில் 'ஏழைகள் சிரிக்கிறார்கள்' என்ற தலைப்பில் பாரதிதாசனது சிறுகதைகளைத் தொகுத்துப் பூம்புகார் பிரசுரம் வெளியிட்டது. புதுவை முரசு, குயில், தமிழரசு, சினிமா உலகம், போர்வாள் போன்ற இதழ்களில் வெளிவந்த 30 சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

வாழ்க்கையின் துன்ப துயரங்களைச் சுமக்கின்ற அவலம் குறைவதற்காக, ஏழைகள் சிரிக்கிறார்கள், ஆயினும் அவர்கள் அறிவும், உணர்வும் பெற்றெழுந்து விட்டால், ஓடப்பராய் என்பதைப் பாவேந்தரின் கதைகள் தெரிவிக்கின்றன. மூடநம்பிக்கைகளை எள்ளி நகையாடித் தம் கதைகளின் மூலம் பகுத்தறிவுக் கனல் பாய்ச்சுகின்றார் பாவேந்தர்.

'செவ்வாய் உலக யாத்திரை' என்ற சிறுகதை பாவேந்தரின் கற்பனைத் திறனுக்கோர் எடுத்துக்காட்டாகும். பாவேந்தருடைய கதைகள், இரண்டு பக்க அளவேயுடைய மிகச் சிறிய கதைகளாகும். சிரிக்க வைப்பதாகவும், சிந்தனையை தூண்டுவதாகவும் அவை இருக்கின்றன. பாவேந்தர் கதையை மக்களுக்கு தெரிவிப்பதே நோக்கமாகக் கொள்ளாமல் அக்கதைகள் மூலம் அவர் சொல்லவந்த கருத்துக்களையே முன்வைக்கின்றார். தமது புரட்சிக் கருத்துக்களை சிறுகதை வடிவில் தந்தார். சிறுகதைகள் மட்டுமின்றி சில நெடுங்கதைகளையும் எழுதியுள்ளார். 'கெடுவான் கேடு நினைப்பான்' அல்லது 'வாரிவயலார் விருந்து' என்ற தலைப்பில் புதுவை முரசு இதழில் பாவேந்தர் ஒரு நெடுங்கதையை எழுதியிருப்பதாகவும் அறிய முடிகின்றது. 'எல்லோரும் உறவினர்கள்' என்ற தலைப்பிலும் முற்றுப் பெறாத ஒரு தொடர்கதையைக் குயில் இதழில் எழுதியுள்ளார் பாவேந்தர். அவ்வகையில் ஒரு நல்ல கதையாசிரியராகவும் பாவேந்தர் விளங்குவதை நாம் அறிய முடிகின்றது.

நாடக ஆசிரியர் பாவேந்தர்

இளமையில் இருந்தே நாடகத் துறையில் மிகுந்த ஆர்வம் காட்டியவர் பாவேந்தர். பள்ளி நாடகங்களில் தலைமை நடிகராகவும் நடித்துக் காட்டியவர். குசேல உபாக்யானம், பாதுகாபட்டாபிசேகம் முதலிய நாடகங்களில் தலைமை நடிகராக நடித்ததோடு, நாடகத்தை நடத்துகிற பொறுப்பாளராகவும் இருந்திருக்கிறார். குசலேனும், ராமனுமாகத் தோன்றிய பாவேந்தர், சுசீலை, சீதை போன்ற பெண் பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
நடிப்புத் துறையில் வல்லவரான பாவேந்தர், பிற்காலத்தில் நாடக நூல்கள் பலவற்றை எழுதினார். இரணியன் அல்லது இணையற்ற வீரன், நல்ல தீர்ப்பு, கற்கண்டு, அமைதி, சௌமியன், படித்த பெண்கள், சேரதாண்டவம், கழைக்கூத்தியின் காதல், பாரதிதாசன் நாடகங்கள், பிசிராந்தையார், தலைமை கண்ட தேவர் கோயில் இரு கோணங்கள் முதலிய 12 நாடக நூல்களை வெளியிட்டுள்ளார் பாவேந்தர்.
ஒன்றை நன்றாக விளக்க வேண்டும் என்றால் அதை நாடகமாக எழுத வேண்டும் என்று பாவேந்தர் தமது படித்த பெண்கள் நாடகத்தின் முன்னுரையில் கூறுகின்றார். அதற்கிணங்க அவர்தம் நாடகங்கள் அமைந்துள்ளன. பாவேந்தரின் நாடகங்கள் கவிதை நாடகங்கள், உரைநடை நாடகங்கள், சமூக நாடகங்கள், வரலாற்று நாடகங்கள் என நான்கு பிரிவுகளாக உள்ளன.
'இரணியன் அல்லது இணையற்ற வீரன்' என்ற நாடகம் 1934-இல் எழுதப் பெற்று நடிக்கப்பட்டது. 1939-இல் அது நூல் வடிவம் பெற்றது. பகுத்தறிவு இயக்க கொள்கைகளைப் பறைசாற்றுவதாக இந்நாடகம் திகழ்கின்றது.
பழந்தமிழ் கூத்தின் சிறப்பை நல்லதீர்ப்பு என்ற நாடகம் புலப்படுத்துகிறது. பொருந்தாத் திருமணத்தைச் சாடும் நகைச்சுவை நாடகமே கற்கண்டு நாடகம் ஆகும். உரையாடலற்ற ஊமை நாடகமாகிய 'அமைதி' நாடகம் ஒரு புதமை படைப்புடைய ஒரு கதையமைப்பாகும். முடியாட்சியைக் குடியாட்சி ஆக்கும் நோக்கில் படைக்கப்பட்டது சௌமியன்' என்னும் நாடகம் ஆகும்.
பெண்கல்வி பெருகுதல் வேண்டும். அவர்கள் ஆண்களுக்கு நிகராக வாழ்தல் வேண்டும் என்ற கருத்தை விளக்குவது படித்த பெண்கள் என்ற நாடகக் கதையமைப்பாகும்.
சங்க இலக்கியத்திலே காணப்படும் ஆட்டனத்தி ஆதிமந்தி ஆகியோரின் காதல் வாழ்வை விளக்கும் நாடகமே சேரதாண்டவம் ஆகும்.
சங்க காலப் புலவராம் பிசிராந்தையாரின் பெருமை கூறும் நாடகமே 'பிசிராந்தையார்' இந்த நாடகத்தில், 'தமிழனின் உயிர் தமிழே ஆகும் தமிழில் பற்றில்லாதவன் தமிழன் அல்லன்' என்று புலவர் கூறுவது, புரட்சிக் கவிஞரின் உள்ளத்துடிப்பே ஆகும். 1970 ஆம் ஆண்டு சாகித்ய அகாடெமி இந்நாடகத்திற்கு ஐயாயிரம் ரூபாய் பரிசளித்துப் பாராட்டியது.
1980 ஆம் ஆண்டு பூம்புகார் பிரசுரம் வெளியிட்ட 'கோயில் இரு கோணங்கள்' பாவேந்தர் எழுதி இதுவரை வெளிவராத எட்டு நாடகங்களின் தொகுப்பாகும். இந்நாடகங்கள் குயில், முரசொலி போன்ற இதழ்களில் வெளிவந்தவை.
பாவேந்தர், புரட்சிக் கவிஞர், போன்ற சிறப்புப் பெயர்களைப் பாரதிதாசன் பெற்றிருந்த போதிலும், அவரது கவிதைகளுக்குக் கிடைக்காத சாகித்யா அகாடெமியின் விருது 'பிசிராந்தையார்' என்ற நாடகத்துக்குக் கிடைத்திருப்பது பாவேந்தர் மிகச் சிறந்த நாடக உணர்த்துகிறது.

திரைப்படத் துறையில் பாவேந்தர்

மக்களிடையே கருத்துக்களை எளிதில் பரப்புவதற்குத் திரைப்படமே மிகச் சிறந்த சாதனம். இளமையிலிருந்தே நாடகத் துறையில் அவர் கொண்டிருந்த ஈடுபாடே, புரட்சிக் கவிஞரைத் திரையுலகிற்கு இழுத்துச் சென்றது. 1947 முதல் 1953 வரை ஆறு ஆண்டுகள் திரைப்படத் துறையில் தீவிரமாக ஈடுபட்டார் பாவேந்தர்.

பாலாமணி அல்லது பக்காத் திருடன், கவி காளமேகம், சுலொசனா, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, பொன்முடி, வளையாபதி, ஆகிய திரைப்படங்களுக்குப் பாவேந்தர் திரைக்கதை, உரையாடல், பாடல்கள் எழுதியுள்ளார்.

தாம் உரையாடல் எழுதிய வளையாபதி என்ற திரைப்படத்தில், தம்மைக் கேட்காமல் சில வரிகளை மாற்றி விட்டார்கள் என்பதற்காக, மாடர்ன் தியேட்டர்ஸ் என்னும் திரைப்பட நிறுவனத்துடன் நாற்பதாயிரம் ரூபாய்க்கு செய்திருந்த ஒப்பந்தத்தைத் தூக்கி எறிந்துவிட்டு வந்தாராம் பாவேந்தர். பணத்தைப் பாவேந்தர் எப்பொழுதும் ஒரு பொருட்டாக மதித்ததில்லை என்பதற்கு இந்நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டாகும்.

தமிழ்ப் படங்களின் தரக்குறைவான நிலை பற்றி நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே கவலைப்பட்டவர் பாவேந்தர். எப்படியும் தரமான தமிழ்பபடம் ஒன்றைத் தயாரிக்க விரும்பிய பாவேந்தர் அந்த நோக்கத்தோடு சென்னைக்கு வந்தார். 14.10.1960இல் 'பாரதிதாசன் பிக்சர்ஸ்' என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கினார். தாம் எழுதிய பாண்டியன் பரிசு காப்பியத்தைத் திரைப்படமாக்க முயன்றார். பங்காளிகள் அனைவரும் விலகிச் சென்றதால் அந்த முயற்சி தோல்வி கண்டது.

பின்னர் 'மகாகவி பாரதியார்' என்ற தலைப்பில் பாரதியாரின் வாழ்க்கையைத் திரைப்படமாக்க விரும்பி, திரைக்கதை – உரையாடல் யாவும் எழுதி முடித்தார். படமெடுக்கப் போதிய பணம் தம்மிடம் இல்லாததால், தமிழன்பர்களிடம் நிதி திரட்டியாவது படத்தை எடுக்க நினைத்தார். அதற்காக ஓர் அறிக்கை வெளியிட்டார்.

'என் விண்ணப்பம் இதுதான்! எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும் இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்!'

என்ற அவ்வறிக்கையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆயினும் பாவேந்தர் ஆசை, இறுதிவரை நிறைவேறவில்லை.

பகுத்தறிவு இயக்கக் கவிஞர் பாவேந்தர்

மூடநம்பிக்கையைப் பகுத்தறிவின் மூலம் உணர்த்தியவர் நம் பாவேந்தர். சமூகத்தில் ஆண்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த கல்வியினைப் பெண்களுக்கும் வழங்க வேண்டும். பெண் கல்வியை கற்றால் இவ்வுலகம் செம்மையோடும், சிறப்போடும் விளங்கும். புரட்சிக் கவிஞர் அவர்கள் புதுவையில் ஒருமுறை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார். யார் எதைச் சொன்னாலும் பகுத்தறிவு கொண்டு சிந்தித்துப் பார்க்க வேண்டும், மூடநம்பிக்கை எதிலும் வைக்கக் கூடாது என்று வற்புறுத்திக் கொண்டிருந்தார். பேசிக் கொண்டே இருந்தவர் திடீரென்று கூட்டத்தினரைப் பார்த்து 'அதோ! பின்னால் பாருங்கள்! என்றார். கூட்டத்திலிருந்து அனைவரும் ஆவலோடு திரும்பிப் பார்த்தார்கள். பார்ப்பதற்குரிய ஒரு காட்சியும் அங்கே நிகழவில்லை. இப்படித்தான் யார் எதைசை; சொன்னாலும், அவர்கள் சொல்லுகிறபடியெல்லாம் நடந்து விடுகின்றீர்கள். இதனால் நன்மையா, தீமையா, லாபமா, நட்டமா என்பதையெல்லாம் சிந்திப்பதே இல்லை. நாம் ஏமாளிகளாக இருக்கக் கூடாது. எதையும் சிந்தித்துச் செயல்பட வேண்டும்' என்றார் புரட்சிக் கவிஞர். தொடக்கக் காலத்தில் பாரதிதாசன் பக்திக் கவிஞராக இருந்தார். கடவுள் நம்பிக்கை கொண்ட பாடல்களை எழுதினார். 1926 ஆம் ஆண்டு அவருடைய முதல் நூலாகிய மயிலம் சுப்ரமணியர் துதியமுது வெளிவந்தது. புதுவையில் இருந்து இருபது கல் தொலைவிலுள்ள மயிலத்திலிருந்து, மாசிமகத்தை ஒட்டி ஆண்டுதோறும் முருகன் சிலையைப் புதுவைக் கடற்கரைக்குக் கொண்டு வருவார். அவ்விழாவில் பாடுவதற்காக எழுதப்பட்ட பக்திப்பாடல்களே 'சுப்ரமணியர் துதியமுது' நூலாயிற்று. இந்நூலின் பாடல்கள் யாவும் கடின நடையில் அமைந்தவை.

பின்னர், விடுதலை இயக்கப் போராட்டத்தின் போது பத்தாண்டுகள் பாரதியாருடன் பழகுகின்ற வாய்ப்பு பாவேந்தருக்கு கிடைத்தது. அப்பொழுது அவர் தேசியக் கவிஞராக மாறினார். அவரது கவிதை நடையும் எளிமையாக மாறியது. கதர் ராட்டினப்பாட்டு, சிறுவாம் சிறுமியர் தேசிய கீதம், தொண்டர் நடைப்பாட்டு முதலிய விடுதலை உணர்வு ஊட்டும் தேசியப் பாடல்களை அப்பொழுது அவர் எழுதினார். பாரதியாருடைய மறைவுக்குப் பிறகு, பெரியாருடன் பழகுகின்ற வாய்ப்பு பாவேந்தருக்கு வாய்த்தது. அந்த நட்பின் விளைவாக, 1926 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தில் பாவேந்தரும் சேர்ந்தார். அது முதல் பகுத்தறிவு இயக்கக் கவிஞராக மாறினார். சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைக் குடியரசு போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதினார்.

சமயத்தின் பெயராலும், சாதிகளின் பெயராலும் சமுதாயத்தில் நிலவிவந்த சீர்கேடுகளைச் சாடினார். கண்மூடிப் பழக்கவழக்கங்கள் மண்மூடிப் போகும் வகையில் புரட்சிகரமான பாடல்களை எழுதினார். மூடநம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டி, சமுதாய மாற்றத்திற்கு வித்திட்டார்.

பாரதிதாசன் நூல்கள்

வரிசை எண் நூல் பெயர் வெளியான ஆண்டு
1 மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 1926
2 சிறுவர் சிறுமியர் தேசியகீதம் 1930
3 தொண்டர் படைப்பாட்டு 1930
4 கதர் இராட்டினப் பாட்டு 1930
5 தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு 1930
6 சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 1930
7 சுயமரியாதைச் சுடர் 1931
8 புரட்;சிக் கவி 1937
9 பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி 1938
10 இரணியன் அல்லது இணையற்ற வீரன் 1939
11 எதிர்பாராத முத்தம் 1941
12 இசையமுது – முதற்தொகுதி 1942
13 குடும்ப விளக்கு – முதற்தொகுதி 1942
14 பாண்டியன் பரிசு 1944
15 இருண்ட வீடு 1944
16 காதல் நினைவுகள் 1944
17 நல்ல தீர்ப்பு 1944
18 அழகின் சிரிப்பு 1944
19 குடும்ப விளக்கு - இரண்டாம் பகுதி 1944
20 கற்கண்டு 1944
21 எது இசை? 1945
22 தமிழியக்கம் 1945
23 அமைதி 1946
24 கவிஞர் பேசுகிறார் 1947
25 சௌமியன் 1947
26 முல்லைக்காடு 1948
27 காதலா? கடமையா? 1948
28 இந்தி எதிர்ப்புப் பாடல்கள் 1948
29 கடல்மேற் குமிழிகள் 1948
30 அகத்தியன் விட்ட புதுக்கரடி 1948
31 திராவிடர் திருப்பாடல் 1948
32 படித்த பெண்கள் 1948
33 குடும்ப விளக்கு மூன்றாவது பகுதி 1948
34 பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி 1949
35 சேரதாண்டவம் 1949
36 தமிழச்சியின் கத்தி 1949
37 ஏற்றப் பாட்டு 1949
38 பாரதிதாசன் ஆத்திச்சூடி 1949
39 திராவிடர் புரட்;சித் திருமணத் திட்டம் 1949
40 குடும்ப விளக்கு – நான்காம் பகுதி 1950
41 குடும்ப விளக்கு – ஐந்தாம் பகுதி 1950
42 இன்பக்கடல் 1950
43 சத்திமுத்தப் புலவர் 1950
44 அமிழ்து எது? 1951
45 கழைக்கூத்தியின் காதல் 1951
46 இசையமுது - இரண்டாம் தொகுதி 1952
47 பொங்கல் வாழ்த்துக் குவியல் 1954
48 பாரதிதாசன் கவிதைகள் (சிறுகதை) 1955
49 பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதி (கவிதை) 1955
50 தேனருவி 1956
51 தாயின் மேல் ஆணை 1958
52 இளைஞர் இலக்கியம் 1958
53 பாரதிதாசன் நாடகங்கள் 1959
54 குறிஞ்சித் திட்டு 1959
55 கண்ணகி புரட்சிக் காப்பியம் 1962
56 மணிமேகலை வெண்பா 1962
57 பாரதிதாசன் பன்மணித்திறள் 1964
58 பிசிராந்தையார் 1967
59 பாரதிதாசன் கவிதைகள் - நான்;காம் தொகுதி 1977
60 காதல் பாடல்கள் 1977
61 குயில் பாடல்கள் 1977
62 தமிழுக்கு அமிழ்தென்று பேர் 1978
63 ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது 1978
64 நாள் மலர்கள் 1978
65 புகழ் மலர்கள் 1978
66 வேங்கையே எழுது 1978
67 தலைமலை கண்ட தேவர் 1978
68 ஏழைகள் சிரிக்கிறார்கள் 1980
69 கோயில் இரு கோணங்கள் 1980
70 பாட்டுக்கு இலக்கணம் 1980
71 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? 1980
72 சிரிக்கும் சிந்தனைகள் 1981
73 கேட்டலும் கிளைத்தலும் 1981
74 மானுடம் போற்று 1984